கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வரட்சி காரணமாக குறித்த வீட்டார் குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டாரினை தாழ இறக்கி பயன்படுத்துவதற்காக வெட்டப்பட்ட குழியிலேயே குறித்த குழந்தை விழுந்துள்ளது.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தெரிவித்து அயலவர்களின் உதவியுடன் தேடிய போது குழந்தை குறித்த குழியில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்து மீட்டுள்ளனர்.
குழியிலிருந்து குழந்தையை மீட்டெடுக்கும் போதே குழந்தையின் உயிர் பிரிந்த நிலையில்,குழந்தையின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.