60 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு!!

262 0

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம – சந்திரிகாமம் வனப்குதியில் விறகு எடுக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்து படுங்காயம்பட்டு கிடந்த நிலையில், மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை 9 மணியளவில் விறகு எடுக்க செல்வதாக வீட்டில் உறவினர்களிடம் கூறிவிட்டு சென்று மாலையாகியும் வீடு திரும்பாமையினால் அவரது குடும்பத்தினர் டயகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொடர்ந்து பொலிஸாரும், குடும்பத்தாரும் ஊர் பொதுமக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி இன்று  காலை 6.30 மணியளவில் காயம்பட்டு விழுந்து கிடந்த நிலையில் குறித்த நபரை கண்டுள்ளனர்.

உயிருடன் மீட்ட நபரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம தோட்டத்தைச் சேர்ந்த 48 வயதான சூசை சவரியார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையென டயகம பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் டயகம வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment