வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளதால், வடகொரியாவின் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி 90 சதவீதம் வரை குறையும்.
சர்வதேச நாடுகளின் கண்டனம் மற்றும் ஐ.நா. தடைகள் என எதையும் ஏற்றுக்கொள்ளாத வடகொரியா தனது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்துகிறது. சமீபத்தில் அமெரிக்காவை தாக்கும் வல்லமை கொண்ட சக்திவாய்ந்த ஏவுகணையை சோதனை செய்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வகை செய்யும் தீர்மானத்தை அமெரிக்க உருவாக்கியது. இந்த தீர்மானம் மீது நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து ஒருமனதாக வாக்களித்துள்ளன. வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்த தீர்மானம், வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதியை 90% வரை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
வட கொரியாவின் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு 5 லட்சம் பீப்பாய்களாகக் குறைப்பது, கச்சா எண்ணெயை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது, இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது உள்ளிட்டவை இந்த தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
ஏற்கனவே வட கொரியா மீது அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.