கை இல்லாமல் பிறந்த சிறுவனுக்கு செயற்கை கை!

388 0

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் கை இல்லாமல் பிறந்த 9 வயது சிறுவனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ‘3டி’ செயற்கை கை பொருத்தப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜோஸ்தலி. பிறக்கும் போதே இவன் இடது கை இன்றி பிறந்தான். இதனால் அன்றாட பணிகளை செய்வதில் சிரமப்பட்டான்.

இருந்தாலும் வாழ்க்கையில் தைரியமாக போராடி தனது தேவைகளை பூர்த்தி செய்து வந்தான். இந்த நிலையில் அவன் ஒரு பத்திரிகையில் ‘3டி’ முறையில் தயாரித்து பொருத்தப்படும் செயற்கை கை குறித்து படித்தான்.

அதுகுறித்து தனது பெற்றோரிடம் விவாதித்த பின் டாக்டரை சந்தித்தான். அதை தொடர்ந்து டாக்டர்களின் தீவிர முயற்சியின் பேரில் ஜோசுக்கு ‘3டி’ செயற்கை கை பொருத்தப்பட்டது.

‘ஒரு கை இல்லையே’ என்ற மனக்குறையில் இருந்த ஜோசுக்கு தற்போது செயற்கை கை பொருத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.

தற்போது மகிழ்ச்சியில் திளைக்கும் அவன் மற்ற சிறுவர்களை போன்று 2 கைகளுடன் நடமாடுகிறான். இவன் கருவில் இருந்த போது 20-வது வாரத்தில் ‘ஸ்கேன்’ பார்க்கப்பட்டது. அப்போது ஒரு கை இன்றி குழந்தை வளர்ச்சி அடைந்து இருந்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அவன் பிறப்பதற்கு முன்பே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை பெற்றோர் சந்தித்தனர். அப்போது அவனது பாதங்களின் தசைகள் மூலம் செயற்கை கை உருவாக்கலாம் என அவர் தெரிவித்தார். அதற்காக அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்தனர். அதற்குள் நவீன ‘3டி’ முறையில் செயற்கை கை தயாரித்து வெற்றிகரமாக பொருத்தப்பட்டுவிட்டது.

Leave a comment