ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.
அந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் தினகரன் மற்றும் சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர் களில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 885 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணம் மையமான ராணி மேரி கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அந்த அறையை சுற்றி துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அறையை சுற்றிலும் 8 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குள் வெளியாட்கள் எளிதில் நுழைந்து விடாதபடி ராணி மேரி கல்லூரியை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை (24-ந்தேதி) காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் பணியில் 100 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணிக்கை பணியாளர் தவிர ஒரு நுண் பார்வையாளர் இருப்பர். வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் உறுதி தன்மையை வெளிப்படுத்துவதற்காக வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளரால் ஒவ்வொரு மேஜையிலும் வெளியிடும் முடிவு அறிவிப்பின் நகல் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை முகவருக்கும் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண் ணிக்கை சுற்று முடிந்த பிறகு வேட்பாளர் பெற்ற வாக்குகள் சரி பார்க்கப்பட்டு அடுத்த சுற்று தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்படும். முடிவு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர், வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண் ணும் முகவர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.