போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைப் பெற்றது.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் உடன்பாடு இன்னும் ஏற்பட வில்லை.
கடந்த ஒரு ஆண்டாக பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் பெற்று வருகிறார்கள். புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
அரசு ஊழியர்கள் அல்லது மின்சார வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த வாரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் 27 மற்றும் 28-ந்தேதியில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதையடுத்து அடுத்த வாரம் புதிய ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட உள்ளது. அதனால் அதற்கு முன்னதாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடந்தது.
சென்னை பல்லவன் இல்லத்தில் ஊதிய கமிட்டி கூட்டம் மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தொ. மு.ச., சி.ஐ.டி.யூ., ம.தி.மு.க., ஐ.என்.டி.யூ.சி. விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 47 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களும் பங்கேற்றனர். பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு அரசு ஊழியர்கள், அல்லது மின்சார வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டன.
மின்சார வாரியத்தில் டிரைவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரம், அரசு துறையில் பணியாற்றும் டிரைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எந்த வகையிலான ஊதியத்தை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு செயல் படுத்துவது, அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராயப்பட்டன.
இன்றைய பேச்சு வார்த்தையில் ஊதிய உயர்வு குறித்து இறுதி செய்யப்பட்டாலும் 27-ந்தேதிதான் இதுபற்றி முடிவு அறிவிக்கப்படும்.