பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 100 பேர் மீது வழக்குப்பதிவு

252 0

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் பெறப்பட்ட புகார் மனுக்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் திரும்ப பெறப்பட்டன. அனைத்து தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது. இதனை ஆய்வு செய்ததில் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து தேர்வு எழுதியவர்களில் 196 பேர் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில்,  விடைத்தாளில் உள்ளதை விட அதிக மதிப்பெண் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், குறுக்குவழியில் வேலையில் சேர முயன்றவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a comment