ஒரிஜினல் வீடியோவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசிய காட்சி உள்ளது: கிருஷ்ணபிரியா

327 0

ஒரிஜினல் வீடியோவில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இன்னும் நீளமாக இருக்கும் என்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தெரிவித்தார்.

இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை சசிகலா தான் எடுத்தார். தேவைப்பட்டால் தமிழக அரசு விசாரணை கமி‌ஷனில் அந்த வீடி யோவை காட்டுங்கள் என்று சொல்லி அவர் அதை எங்களிடம் கொடுத்தார். பரோலில் வந்தபோதுதான் அதை தந்தார்.

அந்த வீடியோவை காப்பி எடுத்து ஒன்றை தினகரனிடமும், மற்றொன்றை விவேக்கிடமும் கொடுத்திருந்தோம். அதைத்தான் தினகரன், வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிட வைத்துள்ளார். ஒரிஜினல் வீடியோ இன்னும் நீளமாக இருக்கும்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் அதில் உள்ளது. அதை துண்டித்து விட்டு சில வினாடி காட்சிகளை மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியிடப்பட்டது சசிகலாவுக்கே தெரியாது.

தன் மீது கொலைப்பழி வந்தபோது கூட வெளியிட விரும்பாத ஒரு வீடியோவை தினகரனுக்காக வெளியிட சசிகலா ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். அவர் பொதுச்செயலாளரான போது பல எதிர்ப்புகள் வந்தன.

அவர் நினைத்திருந்தால் அப்போதே அதை வெளியிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இப்போது ஒரே ஒரு தொகுதியில் ஜெயிப்பதற்காக, அதுவும் கட்சியும் சின்னமும் எங்கள் வசம் இல்லாத நிலையில் இந்த வீடியோவை வெளியிட எப்படி அவர் சம்மதம் தெரிவித்திருப்பார்?

எங்களிடம் வீடியோ ஆயிரம் இருக்கிறது என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் சொன்ன போதே சசிகலா கண்டித்தார்.

அந்த வீடியோவை பொது மக்களிடம் காட்டுவதற்காக எடுக்கவில்லை என்று தெளிவாக சொன்னார். அதை மீறி வெளியிடுவதும், கருத்து சொல்வதும் தார்மீக ரீதியாக தவறுதான்.

அரசியலுக்கு சிலர் ஆர்வப்பட்டு வருவார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா? என்றால் இல்லை. ஆனால் அரசியலுக்கு வருவேனா என்றால் கண்டிப்பாக வருவேன். எப்படி வருவேன், எந்த வழியில் வருவேன் என்பதை அடுத்த ஆண்டு வரை பொறுத்திருந்து பாருங்கள். அதற்கான முன்னேற்பாடுகளை நான் செய்யாமல் இல்லை.

எனக்கு 10 வயது இருக்கும் போது நாங்கள் குடும்பத்தோடு போயஸ்கார்டன் வீட்டுக்கு வந்தோம். என் தாயார் இளவரசியும், அத்தை சசிகலாவும் அரசியல் விளையாட்டுகளில் சிக்க பட்டு அவஸ்தைகளையும், அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும் பார்த்து பார்த்து வளர்ந்தோம். அந்த நிலை என் குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதால் குறிப்பிட்ட காலம் வரை அமைதியாக இருந்தேன்.

என் குழந்தைகளுக்கு வாழ்வின் அடிப்படையை உணர வைத்தேன். இப்போது அவர்கள் புரிந்து கொள்ளும் வயதை எட்டி விட்டார்கள். நானும் எனது கடமையை முழுமையாக நிறைவேற்றி விட்டேன்.

நாடா? குடும்பமா? என்று முதலில் யோசித்தபோது குடும்பம் பெரிதாகப்பட்டது. என் குடும்பமா? நாடா? என்று இப்போது பார்க்கும் போது நாடுதான் எனக்கு பெரிதாகப்படுகிறது. எனவே அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்தில் இப்போது நடந்து வரும் ஆட்சியின் அலங்கோலம் என்னையும் அரசியல் பக்கம் இழுத்து வந்து விட்டது.

என்னுடைய அரசியல் வருகை எனது சுய அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment