அமெரிக்கா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமையை வாபஸ் பெற வேண்டும் என அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெரும்பான்மை வாக்குகளால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெருசலேத்தின் நிலைப்பாடு குறித்து எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் செல்லாததும் வலிதற்றதும் ஆகும் எனவும் அத்தகைய தீர்மானங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள128 நாடுகளில் இலங்கை உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கப்பட்டமைக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.
9 நாடுகள் ஐக்கிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ள அதேசமயம் 35 நாடுகள் இது தொடர்பான வாக்களிப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கான நிதியுதவியைத் துண்டிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து இலங்கை உள்ளடங்கலான வளர்முக நாடுகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற குழப்ப நிலை நிலவிய சூழ்நிலையில் இலங்கை . இந்தியா உள்ளடங்கலான அநேகமான வளர்முக நாடுகள் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை அந்தத் தீர்மானம் தொடர்பான பாரிய வெற்றியொன்றாகக் கருதப்படுகிறது.
பல நாடுகள் தமது உள்நாட்டு பிராந்தியங்கள் தொடர்பில் அயல்நாடுகளுடன் நிலவும் பிரச்சினைக்கு ஜெருசலேம் தொடர்பான அமெரிக்காவின் எதேச்சையான அங்கீகாரம் பாதகமாக அமையலாம் என்று அச்சம் மற்றும் இஸ்ரேல் தொடர்பான விரோத மனப்பான்மை என்பன காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தலையும் மீறி இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக நம்புவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து மத்திய அமெரிக்க நாடுகளான கௌதமாலா, ஹொன்டூரஸ், பசுபிக் பிராந்திய நாடுகளான மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நவுறு, பெலாவுக் குடியரசு மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோ என்பன வாக்களித்துள்ளன..
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா தவிர்ந்த நிரந்தர அங்கத்துவ நாடுகளாகவுள்ள சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நட்புறவு நாடுகள் உள்ளடங்கலான முஸ்லிம் உலகிலுள்ள நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிரான மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அதேசமயம் அவுஸ்திரேலியா, கனடா, மெக்ஸிக்கோ, கொலம்பியா, பூட்டான், பிலிப்பைன்ஸ், சொலமன் தீவுகள், தென் சூடான், உகண்டா, வணுவத்து, ஹங்கேரி, ஹெயிட்டி உள்ளடங்கலான 35 நாடுகள் மேற்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருந்தன.
21 நாடுகள் இந்த வாக்கெடுப்பின் போது ஆஜராகியிருக்கவில்லை.
இஸ்ரேலிய பலஸ்தீன பிரச்சினையின் மையமாக ஜெருசலேம் தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. இஸ்ரேலானது ஜெருசலேமை தனது தலைநகராக கருதி வருகின்ற நிலையில் பலஸ்தீனம் கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்காலத் தலைநகராக உரிமைகோரி வருகிறது.
இந்நிலையில்அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமை பிராந்திய சமாதானப் பேச்சுவார்த்தைகளை எதுவித தீர்வு எட்டப்படாத நிலையில் முடிவுக்கு கொண்டு வந்து அந்தப் பிராந்தியத்தில் அமைதியின்மை தோன்றுவதற்கு வழிவகுக்கும் ஒரு நடவடிக்கையாக நோக்கப்படுகிறது.
இஸ்ரேலிய டெல் அவிவ் நகரையே அந்நாட்டின் தலைநகராக அங்கீகரித்து உலக நாடுகள் தமது தூதரகங்களை அந்நகரில் செயற்படுத்தி வருகின்ற நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்தப்போவதாக அறிவிப்புச் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 193 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அவசரக் கூட்டமொன்றைக் கூட்டி ஜெருசலேம் தொடர்பான மேற்படி முக்கியத்துவம் மிக்க வாக்கெடுப்பை நடத்தியது.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிதி்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமெரிக்கா தனது மறுப்பாணை அதிகாரத்தை ( வீற்றோ அதிகாரம்) பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டதையடுத்து பலஸ்தீனியர்களால் மேற்படி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
துருக்கி மற்றும் யேமனால் முன்வைக்கப்பட்டிருந்த இந்தத் தீர்மான வரைபில் அமெரிக்கா தொடர்பில் எதுவும் பெயர் குறிப்பிட்டுக் கூறப்படவில்லை என்ற போதும் ஜெருசலேம் தொடர்பில் அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆழ்ந்த கவலையைத் தருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையை ‘பொய்களின் இல்லம்’ எனக் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேசமயம் ஜெருசலேம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இஸ்ரேலுடன் இணைந்து உண்மையின் பக்கமாக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி செலுத்தவதாக கூறினார்.
இந்நிலையில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர் கூறுகையில், பலஸ்தீனத்துக்கான ஒரு வெற்றியாக இந்த வாக்கெடுப்பு உள்ளதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலான மேற்படி வாக்கெடுப்பிற்கு முன்னர் அங்கு உரையாற்றிய அந்த சபைக்கான அமெரிக்கத் தூதுரவர் நிக்கி ஹேலி, அமெரிக்காவின் தீர்மானம் மேற்படி பிரச்சினை குறித்த இறுதியான ஒன்றென தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் இது பலஸ்தீன, இஸ்ரேலிய பிரச்சினை தொடர்பான தீர்வு எதுவும் எட்டப்படும் பட்சத்தில்அ தனைத் தடுப்பதாக அமையாது எனவும் வலியுறுத்தியிருந்தார்.
“ இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமது உரிமையை செயற்படுத்தியமைக்காக ஐக்கிய நாடுகள் சபையில் தனித்துவிடப்பட்ட இந்த நாளை அமெரிக்கா ஞாபகத்தில் வைத்திருக்கும்” என அவர் கூறினார்.
“ அமெரிக்கா ஜெருசலேமில் தனது தூதரகத்தைச் செயற்படுத்தவுள்ளது. அதுவே நாம் செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் விரும்புவதாகும். அது . சரியான ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையிலான எந்தவொரு வாக்கெடுப்பும் அதில் எந்தவொரு வேறுபாட்டையும் ஏற்படுத்தாது” என நிக்கி ஹேலி தெரிவித்தார்.
வாக்கெடுப்பிற்கு முதல்நாள் புதன்கிழமை டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிடுகையில், அமெரிக்காவிலிருந்து பல மில்லியன்கணக்கான பணத்தை உதவியாகப் பெறும் நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவ்வாறு அந்நாடுகள் வாக்களிப்பதால் அந்நாடுகளுக்கான நிதியுதவியை துண்டித்து அமெரிக்கா பெருந்தொகை பணத்தை சேமிக்கவே அது வழிவகை செய்யும் எனவும் அதனால் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் தொடர்பில் தான் கவலைப்படப்போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மேற்படி வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நாடுகளில் அநேகமானவை உலகின் மிகவும் வறிய நாடுகள் வரிசையில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அதிகாரத்துவம் பொருந்திய அமரிக்காவின் நட்புறவு நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா என்பன மேற்படி வாக்கெடுப்பில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு பாரிய அடியாகக் கருதப்படுகிறது.
இநிலையில் டொகால்ட் ட்ரம்பின் அடுத்த கட்ட நகர்வு என்னவாகவிருக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.