மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்ப்படுத்தும் வகையிலான கருத்தரங்கு ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கணித பாட ஆசிரியர்களிடையே கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் கணித பாடத்தில் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என இங்கிலாந்திலிருந்து வந்த கணிதத்துறைத் தலைவர் ப. நடேசன் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். செல்வராஜாவின் முயற்சியினால் ஆசிரியர்களுக்கான முழுநாள் கருத்தரங்கில் மட்டக்களப்பு வலயம், கல்குடா வலயம், வவுணதீவு மேற்கு வலையங்களிலிருந்து 150 கணித பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் கற்பித்தலில் தங்களது திறன்களையும் வெளிப்படுத்தினர்.மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். கோவிந்hராஜா, கல்குடா பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். குலேந்திரகுமார், மட்டக்களப்பு வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சுகுமாரன், கல்குடா வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.ரி. அமலதாஸ், மட்டக்களப்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.