அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படிருந்த பேரணி மீது, காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோக தாக்குதல் மேற்கொண்டனர்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் இன்று பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பயணித்தது.
எனினும் பேரணியை கொள்ளுப்பிட்டியில் வைத்து, காவல்துறையினர் இடைமறித்தனர்.
மாணவர்கள் அதனை மீறிச் செல்ல முற்பட்ட போது, காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனிடையே, தம்புள்ளை கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் மீதும் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்று வரும் இலங்கை அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க, தமக்கு நுழைவு அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இவர்களை களைக்கும் நோக்கில் காவல்துறையினர் இவ்வாறு தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டனர்.