வடக்கின் இராணுவ முகாம்கள் குறித்து இராணுவ பேச்சாளர் பதில்

365 0

sl-army2யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் சார்ந்த பகுதிகளில் பொதுமக்களுக்காக காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திபில் இன்று பங்கேற்ற இராணுவ பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

பொதுவாக இராணுவ முகாம்கள் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி திட்டமிட்ட அடிப்படையிலேயே அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வலிகாமம் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் பகுதிகளை பொறுத்தவரையில் அங்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பேன்கி மூன், யாழ்ப்பாணம் செல்லும் போது, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் இதன் போது இராணுவ பேச்சாளரிடம் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், தமிழ் மக்களும் தமது சகோதரர்கள் என்ற அடிப்படையில் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைள் தொடர்பில் அவர்கள் தெளிவை கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில் வன்னியில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் செய்தியார்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, தென்பகுதியிலும் அதுபோல் வடபகுதியிலும் இவ்வாறானவர்கள் செயற்படுகிறார்கள்.

இவர்கள் தொடர்பில் காவல்துறையினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர் என குறிப்பிட்டார்.

எனினும் நாட்டின் நல்லிணக்கம் கருதி ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.