போர் முடிந்தாலும் இருளிலேதான் மக்கள் இருந்தார்கள். போருக்கு முன்னர் வெளிப்படையாக இருந்த அச்சம் போருக்குப் பின்னர் நிழல் அச்சத்தோடு கழிந்தது. அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு- பதுளைவீதி இலுப்படிச்சேனையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உப அலுவலகம், நூலகம், என்பனவற்றை உள்ளடக்கிய பல்தேவைக் கட்டிடத்துக்கு சுமார் 87 இலட்சம் ரூபா செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை மாலை (ஜுன் 22, 2016) பிரதேச சபைச் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம், 2015 ஜனவரி 8இற்குப் பின்னர் அன்னத்திற்கு வாக்களித்ததன் பயனாக போர் நிழல் அச்சம் நீங்கி இப்பொழுது அமைதியுடன் வாழக் கிடைத்திருக்கின்றது.
அரசியல்;, அன்றாட வாழ்க்கை, கலாச்சாரம், கல்வி, பொழுபோக்கு என்று எந்த நிகழ்வாயினும் இப்பொழுது மக்கள் அச்சமின்றி அவற்றில் பங்கு கொள்ள முடிகின்றது.
அரசியல் வாதிகள்; முன்னெடுக்கின்ற அரசியலும் சரியாக இருக்க வேண்டுமென்றால் அரசியல்வாதிகளைத் தெரிவு செய்கின்ற மக்கள் அரசியலை சரியாக விளங்கிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான புதிய அரசியல் யாப்பொன்றைக் கொண்டுவருவதுதான் தற்போது இலங்கையின் முக்கிய தேவையாக இருக்கின்றது.
அதுதான் தமிழர்களின் இலட்சிமும் கூட, சுதந்திரத்திற்குப் பின்னர் மிகப்பெரிய இன்னல்களை அனுபவித்து வந்ததும் மிகப்பெரிய கோரிக்கைகளை முன் வைத்து வந்ததும்தான் தமிழர்களின் வரலாறாக இருக்கின்றது.
தங்களுடைய பிரதேச நிருவாகம் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை கொழும்பிலுள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது.
சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு மாகாணம் இந்த நாட்டிலே ஒரு வித்தியாசமான இயல்பைக் கொண்டிருக்கின்றது.
எனவே, நாடாளுமன்றத்திலே இருக்கின்ற 225 பிரதிநிதிகளில் 200 பேர் 25 வீதமான வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது. அப்படி நடந்தால் அது இயற்கையல்ல, இயல்புமல்ல. நாகரிகமும் அல்ல.
அதற்குத் தீர்வாகத்தான் சுயநிர்ணய உரிமையைக் கோருகின்றோம்.
இது மிக அற்புதமான ஒரு காலகட்டம். பல்வேறு திசைகளில் எதிரும் புதிருமாக நின்றவர்கள் எல்லோரும் இந்த நல்லாட்சியிலே இணைந்திருக்கின்றார்கள், இதனைத் தக்க தருணமாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இதைப் போன்றதொரு காலகட்டம் இனி வரப்போவது அரிது,
பல்வேறு சவால்களின் மத்தியில் ஒரு தீக்குளிப்பை நிகழச் செய்துதான் ஸ்ரீலமுகா வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப்பொழுது இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இதனால் எங்கள் இருசாராரைப் பற்றியும் கடும் விமர்சனங்கள் உள்ளேயும் வெளியேயும் உண்டு.
தமிழ் முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் போர் இடம்பெற்ற காலத்திலே மிகத் தொலைதூர இடைவெளியில் பிரிந்து தள்ளிச் சென்றுவிட்டோம்.
அதனால் பரஸ்பரம் பல தப்பபிப்பிராயங்களும், சந்தேகங்களும், புரிந்துணர்வின்மையும் எம்மிடையே உண்டு.
இவற்றை இல்லாமற் செய்து எங்களைச் சுற்றியிருந்த ஆதரவாளர்கள் போர்க்காலத்தில் மிக மிகத் தீவிரமாகச் சிந்தித்த நிலைமையிலிருந்து அவர்களை மாற்றி காலத்துக்கேற்ப சிந்திக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து பழையபடி தமிழ் முஸ்லிம் உறவு துளிர்க்க முயற்சிகளை முன்னெடுக்கின்றோம்.
ஏனெனில் பிரிந்து நின்றதால் இழந்தவைகள் ஏராளம். இனியும் இழக்கத் தயாரில்லை. அழிவுக்குப் பதிலாக ஒற்றுமைப்பட்டு அபிவிருத்தியை அடைந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகப் படித்து, விளையாடி, உணவு உண்டு, தொழில் செய்து, பரஸ்பரம் நன்மை தீமைகளில் பங்கு கொண்டு வாழ்ந்து வந்த வரலாறுகள் அழிந்து விடவில்லை.
மனங்களின் சந்திப்பு என்கின்ற மாபெரும் சக்தி எங்களை அழிவிலிருந்து தடுத்து அமைதியாக வாழவைக்கப் போதுமானது.
பரஸ்பரப் புரிந்துடன் சரியான பாதையை வகுத்துக் கொண்டு பயணிப்போம். அப்பொழுது வெற்றி நிச்சயம்.
இலவம் பழத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல வரலாறு நெடுகிலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பஞ்சாகி காற்றில் பறந்ததை வரலாறே நமக்குப் பாடமாக விட்டுச் சென்றிருக்கின்றது.” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், பிரதேச சபைச் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை, சனசமூக உத்தியோகத்தர் இந்துமதி விமல்ராஜ், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.