இந்நாட்களில் மீண்டும் வில்பத்து தொடர்பாக வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடனேயே அது குறித்து தேடிப்பார்க்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக 1980 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சுற்றாடல் பேரவையின் 13 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
தேசிய சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலமாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை சார்ந்த திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வரைபை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்வாரத்தில் முன்வைக்குமாறும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுற்றாடல் பேரவை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படவேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறியுள்ளார்.