தியாகராஜ பாகவதரின் 171-வது ஆராதனை விழா ஜனவரி 2-ந்தேதி தொடங்குகிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகிறார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீதமும் மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடைபெறும். இந்த ஆராதனை விழாவில் இந்தியாவில் உள்ள கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு தியாகராஜரின் 171-வது ஆராதனை விழா அடுத்தமாதம்(ஜனவரி) 2-ந்தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து 2-ந்தேதி மாலை 6 மணிக்கு தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவர் ஜி.ஆர். மூப்பனார் தலைமை தாங்குகிறார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகிறார்.
விழாவில் சபையின் அறங்காவலர் குழு தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே. வாசன், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 5 நாட்கள் நடைபெறும் இசை விழாவில் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி(சனிக்கிழமை) தியாகராஜருக்கு ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒரே குரலில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், கணேசன், எம்.ஆர். பஞ்சநதம், டெக்கான்மூர்த்தி, சீனிவாசன், செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், உதவிச்செயலாளர்கள் செய்து உள்ளனர்.