தமிழீழ பிரகடனத்தை செய்த வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறோம் அதற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக சட்டத்தரணி க.சுகாஸ் வேட்புமனுவினை யாழ்.உதவி தேர்தல் ஆணையாளரிடம் இன்று (20.12.2017) கையளித்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது 2010 ஆம் ஆண்டு முதல் மாற்றத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றது. அந்த நிலையில் தற்போது முக்கியமான காலகட்டமாகும். அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படவுள்ள இந்த காலகட்டத்தில் , உள்ளூராட்சி அபிவிருத்தியுடன் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆரம்ப புள்ளியாக இந்த தேர்தலை நாம் பார்க்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இளைத்து வரும் தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன.
இதற்கு மேலும் தமிழ் மக்கள் பொறுத்திருந்தால் , தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. வட்டுக்கோட்டை மண்ணானது வரலாற்று ரீதியில் தமிழ் மக்களின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய மண்ணாகும். அந்த மண்ணிலே தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டது. அந்த மண்ணில் இருந்து மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=kpSbwN1EiG4&feature=youtu.be