எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புளோட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நேற்று (செவ்வாக்கிழமை) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற தர்மலிங்கம் சித்தார்தன் நிலைமைகளை ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன
இந்த வீட்டை முன்பு அலுவலகமாகப் பாவித்தோம் கடந்த 2011 உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் குறித்த வீட்டில் இருந்தவர் எங்களிடம் இருந்து ஒதுங்கியிருந்திருக்கின்றார்
இப்போது எடுக்கப்பட்ட ஆயுதங்கள் இங்கு எவ்வாறு வந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.