சிறீலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐநா. செயலர் பான்கிமூனுடன் சிறீலங்கா அரசாங்கம் பேச்சு நடாத்தவுள்ளது.
இன்று மாலை கொழும்பை வந்தடையும் பான்கிமூனுடன், ஐநாவின் அனுசரணையுடன் இந்த நிதியத்தை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிகள் பலவற்றுக்கும் ஆதரவு வழங்கும் வகையிலேயே இந்த நிறுவனத்தை சிறீலங்கா அரசாங்கம் பேச்சு நடாத்தவுள்ளது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஏற்கனவே சர்வதேச நாடுகளிடமிருந்து நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
இதற்கு ஐநாவின் அங்கீகாரமும் கிடைக்குமானால், ஐநாவின் கீழுள்ள அனைத்து அமைப்புக்கள் மற்றும் உலகவங்கி, அனைத்துலக நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் சிறீலங்காவுக்கு உதவத் தயாராக இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.