மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (19) இரவு குறித்த வைத்தியர்கள் தமது கடமை முடிந்து இரவு உணவுக்காக மஹியங்கனை பாலத்திற்கருகில் நடந்துச் சென்ற வேளை சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஆதரவாளர்களுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து வைத்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர்களுள் ஒருவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.