“நல்லிணக்கத்தின் அலைவரிசை” எனும் பெயரில் புதிய தமிழ் அலைவரிசை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக பிறிதொரு அலைவரிசை எண்னொன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவான சனல் ஐ தொலைக்காட்சியில் அதிகமாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதனால், தமிழ் பேசும் மக்களுக்கான தேசிய தொலைக்காட்சி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது. நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான தொழிநுட்ப உபகரணங்கள் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக கலையகம் ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது.
இதனடிப்படையில், சாவகச்சேரி பிரதேசத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியினால் பராமரிக்கப்படுகின்ற காணியில், 100 பேர்ச்சஸ் நிலப்பரப்பை இக் கலையக கட்டிடத் தொகுதியினை நிர்மாணிப்பதற்காக யாழ் மாவட்ட செயலாளரினால் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
அப் பூமிப் பகுதியினை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.