காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின் வழங்கும் செயலூக்கி திருட்டு – கிராம மக்கள் அச்சத்தில்!

262 0

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கி  திருடப்பட்டுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உன்னிச்சை தொடக்கம் கற்பானை வரையான நீண்ட வனப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வாழும் விவசாய குடிநிலப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக காட்டோரங்களில் அமைக்கப்பட்ட மின்சார அதிர்ச்சித் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கி  நெடியமடு பகுதியில் பொருத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்பான சாவடி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த இந்த செயலூக்கி கடந்த சில தினங்களுக்கு முன் திருடப்பட்டதால் காட்டு யானைத் தடை வேலிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது பெரும்போக நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைக் காலம் என்பதாலும் மாரிமழை காலம் என்பதாலும் காட்டு யானைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவது தமது வாழ்வாதார மற்றும் உயிர்ப் போராட்டம் என்றும் கிராம மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

மின் செயலூக்கி திருடப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தாங்கள் விசாரணை நடாத்தி வருவதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வறிய கிராம மக்களுக்கு காட்டு யானைகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும் இத்தகைய உபகரணத்தை சமூக விரோத விஷம சக்திகள் திருடிச் சென்றிருப்பது மட்டக்களப்பிலும், இலங்கையிலும் இதுவே முதற் தடவையென்று மட்டக்களப்பு வன இலாகா அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், அச்சத்தால் உறைந்து போயிருக்கும் தொலை தூரக் கிராமங்களிலுள்ள மக்களுக்கும் விவசாயிகளுக்கும் காட்டு யானைகளிலிருந்து பாதுகாப்பை வழங்குவதில் தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

யானை வேலிக்கு மின்சாரம் இல்லாத காரணத்தால் தாம் இரவு வேளையில் குழந்தைகளுடன் தூக்கமின்றி இருப்பதாகவும், திருடப்பட்ட மின் செயலூக்கி உபகரணத்தை மீண்டும் அந்த இடத்தில் பொருத்தி தமது உயிரையும் தமது விவசாயத்தையும் காட்டு யானைகளின் அழிவிலிருந்து  பாதுகாக்க  அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் கிராம மக்களும் வேண்டி நிற்கின்றனர்.

Leave a comment