சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்துவது அவசியம்- மைத்திரிபால

251 0

தேசத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக நாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி, சுற்றாடல் பாதுகாப்பிற்காக தேசிய திட்டமொன்றின் அடிப்படையில் செயற்பட்டு அந்த இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய சுற்றாடல் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக 1980 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சுற்றாடல் பேரவையின் 13 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

தேசிய சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலமாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை சார்ந்த திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இவ்வரைபை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்வாரத்தில் முன்வைக்குமாறும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுற்றாடல் பேரவை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படவேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

இந்நாட்களில் மீண்டும் வில்பத்து தொடர்பாக வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் தொடர்பாகவும் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி, அத்தகைய தகவல்கள் கிடைத்தவுடனேயே அது குறித்து தேடிப்பார்க்க வேண்டியது குறித்த நிறுவனங்களின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

Leave a comment