6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் கட்டணம் உயர்கிறது

254 0

தமிழக அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், நீண்ட தூர பேருந்து சேவைக்கான அரசு விரைவு போக்குவரத்து கழகம் இரண்டும் தனித்தனியாக செயல்படுகின்றன.

தமிழக அரசின் இந்த போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்து சேவையை தமிழ்நாடு முழுவதும் தினமும் சுமார் 2 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.

ஏழை-எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு மிக, மிக குறைந்த கட்டணம் நிர்ணயித்துள்ளதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தையும், இழப்பையும் சந்தித்து வருகின்றன. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை விட தமிழகத்தில் 40 சதவீதம் பஸ் கட்டணம் குறைவாக இருப்பதால் நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை.

6 ஆண்டுகளுக்கு முன்பு 2011-ம் ஆண்டு இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. என்றாலும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை சரி கட்ட முடியவில்லை. நஷ்டம் தொடர்கதையாக நீடித்தப்படி உள்ளது.

இதன் காரணமாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.2,400 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வங்கிக் கடனுக்காக போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகளை அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே போக்குவரத்து கழக பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டிய தொகை மட்டும் ரூ.1500 கோடி நிலுவையில் உள்ளது. கடன்களை அடைத்து, இந்த நிலுவைத் தொகையை எப்போது கொடுக்க முடியுமோ என்ற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தமிழக அரசு பஸ்களின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.கடன் சுமையை குறைக்க, பஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க, புதிய பஸ்கள் வாங்க, பராமரிப்பு பணிகளை மேம்படுத்த அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 56 காசில் இருந்து 73 காசாக உயர உள்ளது.சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் கடடணம் 60 பைசாவில் இருந்து 75 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாக உயர உள்ளது.

குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாயாக உள்ளது. இந்த கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகப்பட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும்.நீண்ட தூரம் செல்லும் பஸ்களின் கட்டணம் இந்த தடவை கணிசமாக உயரும். தற்போது சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு விரைவு பஸ்களில் ரூ.325 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இனி அந்த கட்டணம் ரூ.440 ஆக உயரும். அதாவது இனி சென்னையில் இருந்து மதுரை செல்ல கூடுதலாக ரூ.115 கொடுக்க வேண்டும்.

Leave a comment