ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர்

250 0

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு ஆலோசகராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

இதில் இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, அக்கு பஞ்சர் டாக்டர் சங்கர், முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் நிர்மலா, டீன் நாராயணபாபு, தி.மு.க. நிர்வாகி டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அரசு டாக்டர்கள் 8 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெ.தீபாவின் கணவர் மாதவன் 2 முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சில விவரங்களை மனுவாக எழுதி கொடுத்திருந்தார். தீபாவின் அண்ணன் தீபக் பல்வேறு தகவல்களை விசாரணை நீதிபதியிடம் கூறி உள்ளார். இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் ஜெயலலிதாவுக்கு அரசு ஆலோசகராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணனுக்கும், முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன்ராவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஷீலா பாலகிருஷ்ணன் விசாரணை கமி‌ஷன் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார். நாளை ராம்மோகன்ராவ் ஆஜராகிறார்.

Leave a comment