சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க ஐநா செயலர் பான்கிமூன் மூன்றுநாள் பயணமாக இன்று பிற்பகல் கொழும்பை வந்தடையவுள்ளார்.
அவரின் இந்தப் பயணத்தின்போது சிறீலங்கா அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்களைச் சந்திப்பதுடன், நாளை காலியில் நடைபெறும் ‘நல்லிணக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
நாளை மறுநாள் யாழ்ப்பாணம் பயணம் செய்யும் ஐநா செயலர் பான்கிமூன் வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவுள்ளதுடன், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.
நாளை மறுநாள் கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் உரையாற்றவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், தனது பயணத்தின் முடிவில் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளார்.
இந்நிலையில், ஐநா செயலரின் வருகைக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் இனவாதிகள் பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இதேநேரம், காணாமற்போனோரின் உறவுகளும், தமது பிரச்சினைகளை ஐ.நா பொதுச்செயலருக்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.