ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை தோற்கடித்த அமெரிக்கா

7532 0

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்தது.

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெருசலேம் நகரின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பாக இஸ்ரேலிய தலைவர்களும், பாலஸ்தீன தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி திட்டத்துக்கான தூதர் நிக்கோலே மிலடெனோவ் தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் நீடிக்காத வரையில் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெருசலேம் நகரம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க உலகின் சக்தி வாய்ந்த 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒருபக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன.
இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய பிரிட்டன் நாட்டுக்கான ஐ.நா. பிரதிநிதி மாத்யூ ரைகிராப்ட், ஒருதலைபட்சமாக ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவித்ததுடன் தலைமை தூதரகத்துக்கு அங்கு மாற்றும் அமெரிக்காவின் முடிவை ஏற்றுகொள்ள முடியாது.
டெல் அவிவ் நகரில் உள்ள எங்கள் நாட்டின் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற மாட்டோம். ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். இருநாடுகளாலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைநகராக ஜெருசலேம் நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் ஐ.நா.சபைக்கான சிறப்பு தூதர் பிராங்கோயிஸ் டெல்லாட்ரே, அமெரிக்காவின் இந்த தலையீடு அரசியல்சார்ந்த விவகாரத்தை மதமோதலாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதாகவும், இது அமைதிக்கான திறவுக்கோலான ஜெருசலேம் நகரில் தீவிரவாதம் தலைதூக்க காரணமாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.
இதேபோல், பாலஸ்தீனம், ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்து ஐ.நா.சபைக்கான சிறப்பு தூதர் நிக்கி ஹாலே பேசினார்.
‘இன்று இங்கு நாங்கள் சந்திக்கும் தீர்மானம் அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றதாகும். பாலஸ்தீன விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நன்மையைவிட தீமைகளையே அதிகம் செய்துள்ளது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணமாகும்’ என இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நிக்கி ஹாலே குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் தூதரகத்தை எங்கே அமைக்க வேண்டும்? என்பதை எந்த நாடும் எங்களுக்கு கூற முடியாது. எங்கள் தூதரகத்தை எங்கே அமைப்பது? என்பது தொடர்பான முடிவுக்கு எங்கள் இறையாண்மையை பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், நாங்கள் இதை பெருமையுடன் செய்து முடித்தோம் என்ற சாதனை எங்களை சேரும்.
எனவே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் எங்களது முயற்சிகளை தொடரவும், எங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பாற்றிக் கொள்ளும் வகையிலும் இந்த தீர்மானத்தை ‘வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரத்தால் அமெரிக்கா நிராகரிக்கின்றது’ எனவும் அவர் கூறினார்.

Leave a comment