பரவிபாஞ்சானில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு!

364 0

0fe237ae634d7d9ddb91322500d85520_1469526754-bபரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் மூன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தொகுதி காணியே இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு பரவிபாஞ்சான் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்திவந்தனர்.

இதனையடுத்து, கடந்த 17ஆம் திகதி அந்த பகுதிக்கு பயணம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு 14 நாட்கள் கால வரையறை நாளையுடன் நிறைவடையும் நிலையில், பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டுவந்த காணியில் சுமார் நான்கு ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.