லெபனானில் இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியை கற்பழித்துக் கொன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இங்கிலாந்து தூதரகம் உள்ளது. இங்கு ரிபேகா டைகி (30) என்ற பெண் அதிகாரியாக இருந்தார். இவர் திடீரென மாயமாகிவிட்டார். எனவே இவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பெய்ரூட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகே பிணமாக கிடந்தார்.
அதை தொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிகாரி ரிபேகா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்நிலையில், கொலை தொடர்பாக உபர் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் ரிபேகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ரிபேகா வெள்ளிக்கிழமை இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்புவதற்காக உபர் செயலி மூலம் கார் ஒன்றை புக் செய்தார். அந்த கார் டிரைவர் ரிபேகாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். அதனை தடுத்த ரிபேகாவை டிரைவர் கழுத்தை நெறித்தார். அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து விட்டு, காரிலிருந்து வெளியே எறிந்தார். இதில் படுகாயமடைந்த ரிபேகா மரணமடைந்தார்’ என கூறினார்.
சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக கருதப்படும் பெய்ரூட் நகரில் பெண் அதிகாரி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.