தமிழகத்தில் பருவமழை மற்றும் புயல் பாதிப்புகளை சரிசெய்வதற்கு மொத்தம் 9302 கோடி ரூபாய் ஒதுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். மீனவ மற்றும் விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
ஒக்கி புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், அதனை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிரத்யேக கடற்படை நிலையம் ஒன்றினைஅமைக்கவும், அதில் தேடுவதற்கு தேவையான ஹெலிகாப்டர்கள், இறங்கு தள வசதிகள் மற்றும் தொலைதூர தொடர்பு வசதி ஆகியவற்றுடன் விரைவில் நிறுவிடவும் கேட்டுக்கொண்டோம்.
தமிழகத்தில் பருவமழை மற்றும் புயல் பாதிப்புகளை சரிசெய்ய மொத்தம் 9302 கோடி ரூபாய் ஒதுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். நிவாரண பணிக்கு 747 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.
நாங்கள் அளித்த அறிக்கையை பரிசீலித்து மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியுள்ளார். நிவாரணம் வழங்குவதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்பு பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.