ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் நிறைவு பெற்றதையடுத்து வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு முக்கிய விஷயங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 21-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இன்று மாலை 5 மணி முதல் ஓட்டுப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தவும் பங்கேற்கவும் கூடாது.
தேர்தல் தொடர்பான விஷயங்களை, திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் அல்லது இதுபோன்ற சாதனங்கள் மூலம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லக்கூடாது. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் பிரசாரம் செய்யக்கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், அந்த தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் இன்று மாலை 5 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வாகன அனுமதி இன்று மாலையுடன் செல்லாததாகி விடும்.
வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் தங்கள் பயன்பாட்டுக்கான வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்கான வாகனம் மற்றும் அவரது பணியாளர்கள், கட்சிப் பணியாளர்கள் பயன்பாட்டுக்கான மற்றொரு வாகனத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வரவும், திருப்பி அழைத்து செல்வதற்கும் வேட்பாளரோ, அல்லது முகவரோ வாகனத்தை பயன்படுத்தக் கூடாது.
இன்று மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு நடக்கும் 21-ந்தேதி மாலை 5 மணி வரை கருத்து கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளான 21-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.