ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

523 0

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் (21-ந் தேதி) இடைத்தேர்தல் நடக்கிறது. மதுசூதனன் (அ.தி.மு.க.), மருதுகணேஷ் (தி.மு.க. ), கரு.நாகராஜன் (பா.ஜனதா), தினகரன் (சசிகலா அணி), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.-எம்.எல்.ஏ.க் கள் தீவிர பிரசாரம் செய்தனர்.
தொகுதி முழுக்க வீதி வீதியாக சென்று அவர்கள் வாக்கு சேகரித்தனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லியும், அவர் அறிவித்த திட்டங்களை ஆர்.கே. நகர் தொகுதியில் நிறைவேற்றிடவும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக பிரசாரம் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி தலைவர்கள் திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்தார்.
சசிகலா அணியை சேர்ந்த தினகரன் தொகுதி முழுவதும் ஆதரவு திரட்டினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 15 நாட்களுக்கும் மேலாக பிரசாரம் செய்து வந்தார். சுயேட்சை வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் வீதி வீதியாக பிரசாரம் செய்து ஓட்டு கேட்டனர்.
இன்று காலை கட்சித் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்காக இன்று அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும்  எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் வீதி வீதியாக பிரசாரம் செய்து இறுதி கட்ட ஓட்டு வேட்டை நடத்தினார்கள்.
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு கொருக்குப்பேட்டை-மணலி சாலை, கே.எச். ரோடு சந்திப்பு பகுதியில் பிரசாரத்தை தொடங்கி கார்னேசன் நகர், அஜீஸ்நகர், நேரு நகர், நாவலர் குடியிருப்பு, நேதாஜி நகர், பட்டேல் நகர் வழியாக சென்று வைத்தியநாதன் தெருவில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
தினகரன் முதல் புதுவண்ணாரப்பேட்டை செழியன் நகர், இருசப்ப மேஸ்திரி தெரு, அசோக்நகர், தனபால் நகர், பொன்னுசாமி தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று வாக்குசேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் இன்று புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர், திருவள்ளுவர் நகர், அம்மணியம்மன் தோட்டம், கார்ப்பரே‌ஷன் காலனி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று வாக்குகள் சேகரித்து பிரசாரத்தை முடித்தார்.
பா.ஜனதா வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று இறுதி கட்ட ஓட்டுவேட்டை நடத்தி பிரசாரத்தை நிறைவு செய்தனர். 15 நாட்கள் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை ஓய்ந்தது.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 75 பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து வருகிறார்கள். 21 கண்காணிப்பு பார்வையாளர்களும், 21 வீடியோ கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
45 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.30.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சொல்லப்பட்டு ராணிமேரி கல்லூரியில் வைக்கப்படுகின்றன. 24-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 20 சுற்றுகளுக்குள் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

Leave a comment