வட மாகாண மக்களின் தேவையை அறிய மலேசியாவில் இருந்து குழு

245 0

மலேசியாவில் இருந்து குழு ஒன்றினை அனுப்பி, வடமாகாண மக்களின் தேவைகளின் தரவுகளைப் பெற்று உதவிகளை செய்வதாக மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேஷிய பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் இன்று ஷங்கரில்லா ஹோட்டேலில் இன்று (19.12) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.

சுமார் 45 நிமிட நேரம் இருவரின் சந்திப்பும் இடம்பெற்றது. பிரதமருடன் வந்திருந்த அமைச்சர்கள் வைத்திய கலாநிதி சுப்ரமணியம், டாடோ சாமிவேலு, தனிப்பட்ட அவரின் வைத்தியர் வைத்தியகலாநிதி ஜெயந்திரன் சின்னத்துரை உட்பட அவரின் அலுவலர் குழாமும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வட இலங்கை மக்களுக்கும் மலேஷியா நாட்டுக்கும் இடையில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ள உறவை வலியுறுத்தினர். இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் மலேஷியாவில் ஒருமித்து தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டாலும் இருதரப்பாரின் முன்னோர்களும் வித்தியாசமான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய தமிழ் மக்கள் தொழிலாளர்களாக வேலை பார்க்க வந்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர் இலிகிதர் வேலை பார்க்கவே வந்தார்கள் என்றும் கூடிய கல்வித் தகைமைகளைக் கொண்டிருந்த அவர்களின் மூன்றாந் தலைமுறையினரே இன்று தம் நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இலங்கையில் சகல தொழிற் துறைகளிலும் பெருவாரியான தமிழர்களே இடம் பிடித்திருந்ததாகவும் அதைப் பொறுக்காத பெரும்பான்மை இன மக்கள் அப்பொழுதிருந்தே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்து பாரபட்சம் காட்டி இன்று கைவிட்டு எண்ணக் கூடியவர்களே அரச சேவையில் கடமையாற்றுவதாகவுங் கூறினார்.

தமிழர்கள் நவீன மலேஷியாவை உருவாக்க முன்னின்றிருந்தார்கள் எனில் இன்று அங்கிருந்து அதே புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் எம் நிலையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இராணுவத்தினர் சுமார் 62000 ஏக்கர்கள் நிலத்தில் குடியிருந்து வருவதாகவும் வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற இன்னோரன்ன துறைகளில் படையினரின் கையே ஓங்கி இருப்பதாகவுஞ் சுட்டிக் காட்டியுள்ளார்.

Leave a comment