இலங்கை தொழிலாளர் காங்கிரசை குறை கூறுவதில் நியாயமில்லை

248 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஆறுமுகன் தொண்டமானும் பேச்சுவார்த்தை நடத்தியே, வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடமைப்போடு இலங்கை தொழிலாளர் தேசிய காங்கிரஸ் போட்டியிடுவதாக மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார். 

இன்று (18.12.2017) கொட்டகலை பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் பட்டியிலில் தமிழ் வேட்பாளர்களை நீக்கியிருந்ததாக கூறியிருந்தார்.

நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே அவர்களதும் எங்களதும் வேட்பாளர் பட்டியலை தீர்மானித்தோம். நாங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களை வேட்பாளர் பட்டியலில் இட்டுள்ளோம்.

அவர்கள் நாங்கள் கேட்ட ஆசனங்களுக்கான வேட்பாளர்களை கொடுத்துள்ளனர். அதேபோல் அவர்கள் கேட்ட ஆசனங்களுக்கான வேட்பாளர்களையும் நாங்கள் கொடுத்துள்ளோம். யாரையும் நீக்கவில்லை.

அவர்களது வேட்பாளர்களை நீக்குவதற்கு எந்த தேவையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு அவர்கள் யார் யாரை பரிந்துரை செய்தார்களோ அவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துள்ளோம்.

தலவாக்கலை லிந்துலை நகரசபையிலே 3 வேட்பாளர்களை கேட்டார்கள். அவர்களுக்கு அந்த மூன்று வேட்பாளர்களையும் கொடுத்துள்ளோம். அதில் ஒருவர் தமிழ் வேட்பாளர் இருவர் சிங்கள வேட்பாளர்கள். அதே போன்று நுவரெலியா பிரதேச சபை சபைக்கு ஐந்து சிங்கள வேட்பாளர்களை பரிந்துரை செய்தார்கள். அதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதேபோல் ஹட்டன் – டிக்கோயா நகரசபை, மஸ்கெலியா பிரதேச சபை போன்றவற்றிற்கு அவர்கள் பரிந்துரை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிந்துரையின் படி கேட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பட்டியலில் பெயர் இல்லை என்றால் அது அவர்கள் கட்சிக்கு உட்பட்ட விடயம். அதற்கு அவர்கள் தங்கள் கட்சியுடனேயே பேசி தீர்வு காண வேண்டும். அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெயரை நீக்கியுள்ளது என குறை கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை.

அது அவர்கள் உட்கட்சியிலுள்ள பிரச்சினை. எங்களுக்கும் அவர்கள் கட்சிக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. யாராவது தனி ஒருவருக்கு பிரச்சினை இருந்தால் அவர் அவர்கள் கட்சிக்குழுவுடன் பேசியே தீர்வு காண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

Leave a comment