பெரும் அரசியல் கட்சிகளைவிட, சிறுஅரசியல் கட்சிகள் இனங்களையும், மதங்களையும் மையப்படுத்தியே செயற்பட்டுக் கொள்கின்றன. இந்த இரண்டையும் முன்னிலைப்ப டுத்தாவிட்டால், சிறு கட்சிகளுக்கு விமோசனம் கிடையாது. பொதுமக்கள் விரும்பியோ, விரும்பாமலோ சிறு கட்சிகளிடம் சிறைக் கைதிகளாக இருந்துவருகின்றனர்.
இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நிதி, வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் இலங்கைப் பத்திரிகைப் பேரவை இணைந்து பதுளையில் நேற்று ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தின. இந்த நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்று கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போதையஆட்சியில், நான் தொங்கிக் கொண்டிருப்பதால் தான், ஊவா வெல்லஸ பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முன்னின்று நடத்த முடியாமல் போய்விட்டது. எமது கட்சிஆட்சிஅமைந்திருக்குமேயானால், மேற்கண்ட எனது வேலைத்திட்டத்தை ஏற்படுத்தியிருப்பேன்.
சமூகங்களிடையே நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவேண்டியது காலத்தின் அவசியமாகும். இதனை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன துரிதமாக முன்னெடுத்து வருகின்றார்.
வாகன விபத்தொன்று ஏற்பட்டால் விபத்தில் காயப்பட்டவர் ஒரு இனமாகவும், விபத்தை ஏற்படுத்தியவர் ஒரு இனமாகவும் இருப்பாரேயானால், விபத்தில் காயப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டவாக னத்தை தீ வைப்பது, அவரது உடமைகளைச் சேதப்படுத்துவது, தாக்குவதால் இன முறுகல்கள், மதமுறுகல்கள் ஏற்பட்டு இன மற்றும் மதவாதிகளால் பெரும் பதட்டமும், பீதியும் ஏற்பட்டு, நாட்டில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டுவருகின்றது.
இது போன்று சிறுசிறு சம்பவங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. இதனால் பெரும் அழிவை எமது நாடு எதிர்நோக்குகிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளிலும் மாணவர்கள் மத்தியில் ஆங்காங்கே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இதுபோன்ற நிலை தொடர்வதற்கு அனுமதிக்கக்கூடாது. இந்த விடயத்தில் ஊடகவியலாளர் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். தேசியநல்லிணக்கம், தேசிய சகவாழ்வு ஆகியவற்றைமுன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டியது காலத்தின் அவசிய தேவை.
எமது நாடு சுதந்திரமடையும் வேளையில் அனைத்து இனங்களும் ஒன்றுபட்ட வகையிலேயே செயற்பட்டனர். ஆனால், காலப்போக்கில், பிரிவினைகள், பிளவுகள், முறுகல்கள் ஏற்படத் தொடங்கின. தற்போதும் நீறுபூத்தநெருப்பாக இருக்கும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தேசிய நல்லிணக்கம், தேசிய சகவாழ்வு இந்நாட்டில் உறுதிப்படுத்தவேண்டும். “கொசிப் ஜெனலிசம்”என்ற ஊடக கலாசாரத்திலிருந்து ஊடகவியலாளர்கள் விடுபடல் வேண்டும்” என்றார்.