கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம்: துருக்கி அதிபர்

412 0

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.
இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. மேலும், அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் சில புதிய குடியேற்றங்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. எனினும், ஜெருசலேம் நகரம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நகராகவே கருதப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிரம்ப்பின் அறிவிப்பையடுத்து எதிர் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisation
of Islamic Cooperation (OIC) அவசர மாநாடு பாலஸ்தீனம் நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் 13-12-2017 அன்று நடைபெற்றது. 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இஸ்தான்புல் நகரில் இன்று நடைபெற்ற இந்த அமைப்பின் அவசர மாநாட்டில் உரையாற்றிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் இருந்து வந்துள்ளது. இனி எப்போதும் அப்படியே இருக்கும். ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராக நீடிக்காத வரையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியோ, நிரந்தரத்தன்மையோ ஏற்படாது என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார்.
கடவுளின் அனுமதிப்படியும், விருப்பத்தின்படியும் கிழக்கு ஜெருசலேம் நகரில் எங்கள் நாட்டு தூதரகத்தை திறப்பதற்கான நாள் நெருங்கி விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment