பாகிஸ்தானில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பெத்தேல் நினைவு தேவாலயம் உள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் கீழ் செயல்படும் இந்த தேவாலயத்தில் நேற்று பிராத்தனைக்காக சுமார் 400-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். பொதுவாகவே இந்த பகுதி உயர்மட்ட கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியாகும்.
இதற்கிடையே, நேற்று முற்பகலில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு இரு தீவிரவாதிகள் தேவாலயத்தை நோக்கி வந்தனர். தேவாலயத்தின் வாசலில் ஒரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்தான். மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினான்.
துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய தீவிரவாதியை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுட்டுக் கொன்றனர் எனவும், இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தேவாலயம் மீது நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 44 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.