இலங்கையின் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
காமினி திஸாநாயக்க மன்றத்தின் கற்கைநெறி நிறுவனத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள், ஆளுமை விருத்தியாளர்கள், கணினி மற்றும் ஆங்கில அறிவு தொடர்பில் தமது டிப்ளோமா பட்டத்திற்கு தேர்ச்சி பெற்ற 250 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும், கௌரவிக்கும் நிகழ்வும் நுவரெலியா அரலிய ஹோட்டலில் இன்று காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் ரஷ்யாவின் இந்த தடைகுறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தேயிலைக்கு கெப்ரா என்ற வண்டுகள் காரணமாக ரஷ்யா தடைவிதித்துள்ளமை புதுமையான விடயம். விசேடமாக தானிய உரத்துடன் தொடர்புபட்ட வண்டு இனம் இது. பொதியிடலின் போது இந்த வண்டுகள் கலந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.
ஆகவே இந்த வண்டு தேயிலை ஊடாக அல்ல வேறு வழியில் தேயிலை பொதிகளில் சேர்ந்துள்ளது என்பதே அரசாங்கத்தினதும் தேயிலை சபையினது நிலைப்பாடு. பெரும்பாலும் தேயிலை ஏற்றிச் செல்லப்படும் கப்பல்கள் வேறு ஒரு இடத்தில் துறைமுகத்தில் நிறுத்தப்படும் போது அதன் ஊடாக இந்த வண்டுகள் வந்திருக்க கூடும் என்பதே எமது நிலைப்பாடு.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கும் தற்காலிக தடையை நீக்குவதற்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். தற்போது இராஜதந்திர மட்டத்தில் ரஷ்ய அரசாங்கத்துடன் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம் இந்த பிரச்சினை நீடிக்காது என்ற உறுதிமொழியை விசேடமாக தேயிலை துறையிலுள்ள வர்த்தகர்கள் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நான் வழங்குகின்றேன். ரஷ்யா, எமது தேயிலையை பாரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடாக காணப்படுகின்றது.
ஆகவே எமது அனைத்து விதமான பலத்தையும் பயன்படுத்தி இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்க முயற்சிக்கின்றோம் என்றார்.