அன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை உலகிற்கு கொண்டுவரும் நத்தார் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
திருகோணமலை இந்து கலாசார மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற அரச நத்தார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஒரே நாட்டில் வாழும் மக்கள் என்ற வகையில் நத்தாரின் செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன், “அன்பின் ஊற்று நத்தார்” என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி அரச நத்தார் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மானிட அன்பு நத்தாருடன் தோற்றம்பெறுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நத்தாரின் நோக்கமான ஏழைகளுக்காக அன்பு தீபத்தை ஏற்றுவதும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அனைவருடையவும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக இனங்களுக்கிடையில் சமாதானமும், நல்லிணக்கமும் பலமாக இருக்க வேண்டும் என்பதுடன் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து இனங்கள் மற்றும் சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுமாறு இந்த நத்தாரில் தாம் அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.