ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸின் சகோதரி ஹில்டா ஹெர்னாண்டஸ் உள்பட 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் அதிபராக இருப்பவர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ். சமீபத்தில் நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் எதிர்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே சிறிய வாக்கு வித்தியாசம் நிலவியது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அதிபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஆர்லேண்டோ அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இவரது சகோதரி ஹில்டா ஹெர்னாண்டஸ், அதிபருக்கு நெருங்கிய ஆலோசகராக இருந்தவர். அதற்கு முன்பு அரசின் தொலைத்தொடர்பு துறை செயலாளர் பதவியிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் ஒன்றில் டான்கான்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோமயாகுவா நோக்கி ஹில்டா பயணித்துள்ளார். இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், ஹில்டா மற்றும் அவருடன் பயணித்த 5 பேரும் பலியாகினர்.
பலியானவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.