தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு சட்ட விரோதமானது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு பணி குறித்து மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி கூறியதாவது:-
கவர்னர் பதவி என்பது மாநில அரசை கண்காணிக்கும் பதவியாகும். ஒரு மாநில அரசின் நடவடிக்கைகளை கண்காணித்து அதை சரியான முறையில் வழி நடத்தி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பதே கவர்னரின் பணியாகும்.
ஆனால் இந்த எல்லைகளை மீறி தமிழக கவர்னர் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு செயல்படும் போது கவர்னர் இப்படி தன்னிச்சையாக ஆய்வு பணி மேற்கொள்வது மரபுகளுக்கு எதிரானது. இன்னும் தெளிவாக சொன்னால் சட்ட விரோதமானது. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
பா.ஜனதா மத்திய அரசை கைப்பற்றிய பிறகு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயல்பாடுகளை தொடங்கி வைத்து இருக்கிறது.டெல்லி, புதுவை யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக கவர்னரை தூண்டி விட்டு மத்திய பா.ஜனதா அரசு சதிராட்டம் நடத்தி வந்தது.
தற்போது யூனியன் பிரதேசம் அல்லாத தமிழகத்தில் அந்த நடைமுறையை பின் பற்றுகிறது. இது ஏற்கத்தக்க தல்ல.
மேலும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இத்தகைய செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவார்களா? பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளின் செயல் பாடுகளில் ஜனாதிபதி தலையிட்டால் பொறுத்து கொள்வார்களா? இவ்வாறு அவர் கூறினார்.