ஜெயலலிதா உடல்நிலை பற்றி கூற தடை விதிக்கப்பட்டது: அப்பல்லோ தலைவர் தகவல்

344 0

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வெளியில் தெரிவிக்க டாக்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது.

அவர் பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கும் நீதிபதி சம்மன் அனுப்பி உள்ளார். இந்த தகவலை அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் சி.ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை எங்கள் மருத்துவக் குழுவினர் கடுமையாக போராடி மீட்டனர். ஆனால் நோயின் தாக்கம் அதிகரித்ததால் அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

ஒட்டுமொத்த மக்களின் அன்பை பெற்றவரின் உடல்நிலை குறித்து வெளியே தெரியப்படுத்தினால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவருக்கு காய்ச்சல் என்று அறிக்கை வெளியிட்டதாக தெரியபப்படுத்தி இருந்தார்.

அவர் மேலும் கூறுகையில் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வெளியில் தெரிவிக்க கூடாது என்று அப்பல்லோ டாக்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரது உடல்நிலை பற்றி வெளியில் தெரிந்தால் மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்ததாக பிரதாப் சி.ரெட்டி குறிப்பிட்டார்.

அவரது இந்த திடுக்கிடும் தகவல்கள் ஜெயலலிதா மரணத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment