அ.தி.மு.க. – தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

365 0

201608310525303444_voter-list-Chief-election-officer-Rajesh-lakkani-notice_SECVPFதேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

இதேபோல் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தனித்தனியாக தலைமை தேர்தல் கமிஷன் மே 14-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இரு கட்சிகளும் விளக்கம் அளித்தன.

இந்நிலையில், தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதியிட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள அந்த உத்தரவில், சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இதேபோல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள தி.மு.க. தொடர்பான உத்தரவிலும், எதிர்காலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில், குறிப்பாக தேர்தல் அறிக்கை விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை இப்போது கூறியிருந்தபோதிலும், அதே வழிமுறைகள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.