ஆறு காரணங்களாலேயே உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுவதாக பவ்ரல் அமைப்பின் பேச்சாளர் ரோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்காக பிரதான அரசியல் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போது, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஆறு வேட்புமனுக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு வேட்புமனுக்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகரசபைககு தாக்கல் செய்திருந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.
வேறு பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் குறித்து பவ்ரல் அமைப்பின் பேச்சாளர் ரோஹண ஹெற்றியாராச்சி தகவல் வெளியிடுகையில்,
“புதிய சட்டத்தின்படி, அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கு ஆறு காரணங்கள் உள்ளன.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பொதுச்செயலர் அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவரின் கையொப்பம் இல்லாமை.
- சமாதான நீதிவானின் உறுதிப்படுத்தல் கையொப்பம் இல்லாமை.
- பொதுச்செயலரால் அல்லது சுயேட்சைக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட முகவரால் வேட்பு மனு கையளிக்கப்படாமை.
- தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்காமை.
- போதிய வேட்பாளர்களை கொண்டிருக்காமை.
- கட்டுப்பணம் செலுத்தாமை.
ஆகிய காரணங்களுக்காகவே வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.