ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில் யுனெஸ்கோ நிறுவனத்தால் கடந்த வாரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர்களுடன் சில ஊடக நிறுவனங்களும் மூத்த ஊடகவியலாளர்களும் இணைந்து இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிகழ்வுகள் பொதுவாகவே ஊடகங்கள் மீது அல்லது பொதுமக்கள் மீது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தமாட்டாது என அரசியல்வாதிகள் நம்புவதாலேயே ஊடகங்கள் மீதான பாகுபாடு ஏற்படுகின்றது என்பது சிறந்த விளக்கமாக இருக்க முடியும்.
ஊடகங்கள் தமது ஊடக உரிமைகள் மீதும் தமக்கெதிரான தண்டனைகளை முடிவிற்குக் கொண்டு வருவது தொடர்பிலும் ஆர்வம் காட்டுகின்றனவா என திரு.விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியிருந்தார்.
நிச்சயமாக, ஊடகவியலாளர்கள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் கொடுஞ்செயல்களைத் தாங்கக்கூடிய சக்தியைக் கொண்டவர்கள் அல்ல. அதாவது பிறரால் தாக்கப்படுதல், கடத்தப்படுதல், கால்கள் முறிக்கப்படுதல், காணாமலாக்கப்படுதல் போன்ற பல்வேறு கொடுஞ்செயல்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தியை ஊடகவியலாளர்கள் கொண்டிருக்கவில்லை.
எனினும், ஊடகவியலாளர்களுக்கான அடிப்படை உடல் சார் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் காலம் தாழ்த்தப்படுவதற்கு ஊடகவியலாளர்கள் பொறுப்பெடுக்கவோ அல்லது இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்படவோ முடியாது. சில வழக்குகளின் போது முக்கிய சில தகவல்களைப் பெறுவதற்கு அடிக்கடி விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்த வழக்குகள் இடைநிறுத்தப்படுகின்றன. இது புதிய செயற்பாடல்ல. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விசாரணைகள் இடம்பெறும் போது தொடர் கண்காணிப்புக்களும் இடம்பெற்றன.
தமிழ் மொழி மூல ஊடகங்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாது நிலுவையில் உள்ளன. தமிழ் மொழி மூல பத்திரிகையான உதயன் மீது தொடராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக ஏன் இன்னமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என உதயன் பத்திரிகையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ரி.பிறேமானந், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சகல ரட்ணயக்கவிடம் வினவியிருந்தார்.
ஊடகவியலாளரான கீத் நோயர் கடத்தப்பட்டமை மற்றும் ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை ஆகிய இரண்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் மிக முக்கிய திருப்புமுனைகள் ஏற்பட்டன.
நோயரின் கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவால் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் விடுக்கப்பட்டதாகவும், பின்னர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி அமல் கருணகேசரவிற்கு தொலைபேசி அழைப்பை விடுத்ததுடன், இவர் மேஜர் பிரபாத் புலத்வத்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்ட பின்னரே, நோயர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்தது.
இந்த விசாரணைகளைத் தொடர்ந்து மேஜர் புலத்வத்த மற்றும் நான்கு இராணுவ வீரர்களும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களைக் கைது செய்து விசாரணை செய்தது போன்று ஊடகவியலாளர் நோயரைக் கடத்துவதற்கு கட்டளையிட்ட உயர் மட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்குப் பதிலாக இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இடைநிறுத்தப்பட்டது.
இதேபோன்றே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணையை மீளவும் ஆரம்பிப்பதென நீதிமன்றம் தீர்மானித்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இராணுவப் புலனாய்வுடன் தொடர்புபட்டவரும் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியாகப் பணியாற்றியவர் எனப் பின்னர் அடையாள அணிவகுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டவருமான மலிந்த உடலகம கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து லசந்தவின் படுகொலைக்கு தான் பொறுப்பெடுப்பதாகவும் உடலகமவை விடுவிக்குமாறும் கோரி முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஐ.ஜயமனே சரணடைந்தார்.
தனது அதிகாரத்திற்கு அப்பால் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் அப்போதைய தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் ஊடாக சிறப்பு இரகசியப் பிரிவொன்று செயற்பட்டதாகவும் இப்பிரிவானது இராணுவக் கட்டமைப்பிற்கு வெளியே செயற்படுத்தப்பட்டதுடன் இது ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானவர்களையும் இலக்கு வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.
‘இராணுவக் கட்டளைத் தளபதியின் அனுமதியில்லாது அல்லது அவரது ஒப்புதலின்றி எந்தவொரு இராணுவப் பிரிவையும் செயற்படுத்தவோ அல்லது அதன் மூலம் நடவடிக்கைளை மேற்கொள்வதோ சாத்தியமற்றதாகும்’ என சரத் பொன்சேகா வழங்கிய வாக்குமூலத்திற்கு பதிலடியாக ராஜபக்சவால் கூறப்பட்டது.
இதன் பின்னர் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் ஒன்றுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, தனக்குத் தெரியாமல் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே தந்திரோபாய மட்டத்தில் அல்லாமல் கொள்கை மற்றும் மூலோபாய மட்டத்தில் மேலும் பணியாற்றுவதாகவும் ராஜபக்ச அறிவித்திருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வழக்கு விசாரணைகள் அதிகாரி உடலகமவின் கைதின் பின்னர் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேபோன்று கேலிச்சித்திர வடிவமைப்பாளரான பீரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட கேணல் தர அதிகாரி உட்பட பத்து சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது வரை இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடரப்படவில்லை.
இந்த விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறாதுள்ளமைக்கான காரணங்களை பிரதமர் ஆராய்ந்து கொள்ள முடியும். இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் இந்த விசாரணைகளை முக்கியத்துவப்படுத்துகின்றன என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் காணப்படவில்லை.
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் கடத்தப்பட்டமை மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் போன்றன பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்கள் என எவரும் உரிமை கோர முடியாது. இவ்வாறான தாக்குதல்கள், உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் தமது ஆழ்மன எண்ணங்கள் களங்கமடைந்ததால் அதற்குப் பழிக்குப் பழி தீர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களை மேற்கொள்வதற்காக இவர்கள் இராணுவப் படைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
மரபு சார் இராணுவத்தினர், அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இவ்வாறான சட்ட ரீதியற்ற கட்டளைகளை நிறைவேற்ற முடியாது என மறுக்க முடியும். இதற்கு மாறாக இராணுவப் புலனாய்வுத் துறையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் குற்றங்களுக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக இவர்களுக்குக் கட்டளை வழங்கியவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் உடத்தலவின்ன வழக்கு விசாரணைகள் போன்று இடைநிறுத்தப்படும் நிலையேற்படும். உடத்தலவின்ன வழக்கில் அனுருத்த ரத்வத்த மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டதுடன் ஐந்து இராணுவக் கட்டளை நிலை அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட கீழ்நிலை மற்றும் இடைநிலை இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளை சட்டமா அதிபர் குறைப்பதுடன் இவர்களின் உதவியுடன் இவ்வாறான குற்றங்களுக்கு கட்டளை வழங்கியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை அளிக்க முடியும்.
எனினும், அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறான குற்றங்களுக்கு கட்டளை வழங்கியவர்களை இனங்காண்பதில் அக்கறை காண்பிக்கப்படுவதில்லை. இதற்கு அரசியல் உடன்படிக்கைகளோ அல்லது தீவிர தேசியவாதிகளின் அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.
இவ்வாறான குற்றங்கள் தொடர்பில் உண்மையையும் நீதியையும் கண்டறிவதில் அரசாங்கம் தயக்கம் காண்பிப்பதற்கு ஊடகவியலாளர்களைப் பழிசுமத்துவது எவ்விதத்திலும் நியாயமில்லை.
வழிமூலம் – Daily mirror
ஆங்கிலத்தில் – ரங்க ஜெயசூரிய
மொழியாக்கம் – நித்தியபாரதி