சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்ததாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பல்லோ ஆஸ்பத்திரி குழும தலைவர் பிரதாப் சி. ரெட்டி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவை ஆபத்தான நிலையில் தான் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை.
தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் நடைபெற்று வருவதால் அதுபற்றி மேலும் பேச முடியாது. எங்கள் மருத்துவமனை மருத்துவர்களுக்கு விசாரணை கமிஷனில் இருந்து சம்மன் வந்துள்ளது. எனக்கு சம்மன் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ஜெயலலிதா உடல் நிலை பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக மன்னிப்பு கேட்கிறோம்’ என்று தெரிவித்தார்.
இப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் சி. ரெட்டி, ‘சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.