வருடத்தின் கடைசி மாதமாகிய டிசம்பர் மாதம் புனிதமான மாதமாகவும், அமைதி சமாதானத்தை வலியுறுத்துகின்ற மாதமாகவும் கருதப்படுகின்றது. புனிதர் கிறிஸ்து பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற கிறிஸ்மஸ் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவதன் காரணமாகவே இவ்வாறு கருதப்படுகின்றது. அமைதியையும் சமாதானத்தையும் அஹிம்சையையும் அடையாளப்படுத்தி வலியுறுத்துகின்ற கிறிஸ்மஸைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் புதிய நம்பிக்கைகளுடன் புது வருடம் பிறக்கின்றது என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
டிசம்பர் மாதம் மற்றுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. மனிதர்களின் உரிமைகளை வலியுறுத்துகின்ற சர்வதேச மனித உரிமை தினமும், மனிதர்களுக்குள்ளேயே வலுவிழப்புக்கு ஆளாகியவர்களான மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினமும் டிசம்பர் மாதத்திலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான தினம் 3 ஆம் திகதியும், சர்வதேச மனித உரிமைத் தினம் 10 ஆம் திகதி ஐநா மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
இம்முறை சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தையொட்டி, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்வேறு அமைப்புக்களினால் டிசம்பர் 3 ஆம் திகதியும் அதன் பின்னரான தினங்களிலும் பல இடங்களிலும் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களும், மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்படுகின்ற அமைப்புக்களும், சமூகசேவைத் திணைக்களமும் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தி வருவதைக் காண முடிகின்றது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7.9 வீதமான 1.6 மில்லியன் 16 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகளாகக் காணப்படுவதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்ற அதேவேளை, சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கைக்கும், பொருளாதாரத்துக்கும் வலுவூட்டத்தக்க, வருமானத்தை அதிகரிக்கக் கூடியதான, வாழ்வாதார நடவடிக்கைகளில் அவர்களை உள்ளடக்க வேண்டும் என்று மத்திய வங்கி தனது அந்த அறிக்கையில் குறி;ப்பிட்டிருக்கின்றது.
புள்ளிவிபரங்கள்
ஆயினும் நாட்டின் வேலைவாய்ப்புத் துறையில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கத்தக்க ஆலோசனைகள் எதனையும் மத்திய வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை. நாட்டில் அத்தகைய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றதா என்பதுபற்றியும் அந்த அறிக்கை எதனையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை, குடிசனம் மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆயிரம் பேரில் 87 பேர் வலுவிழப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளது. பால்நிலையில் ஆயிரம் பேருக்கு 77 ஆண்களும், ஆயிரம் பேருக்கு 96 பெண்களும் வலுவிழந்தவர்களாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கின்றது.
சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட அங்கக் குறைபாடு அல்லது செயலிழப்புக்கு ஆளாகியிருப்பதையும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் (ஒரு மில்லியன் – 9 லட்சத்து 96 ஆயிரத்து 939 பேர்) கட்புலன் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். எழு லட்சத்து 34 ஆயிரத்து 213 பேர் நடப்பதில் சிரமமுடையவர்களாக அல்லது நடக்க முடியாதர்களாக வலுவிழந்துள்ளார்கள். மூன்று லட்சத்து 89 ஆயிரத்து 77 பேர் கேட்டல் குறைபாடு உடையவர்களாகவும், மூன்று லட்சத்து 43 ஆயிரத்து 689 பேர் அறிவாற்றல் குறைபாடு உடையவர்களாகவும், கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் (ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 575 பேர்) சுகாதாரம் உள்ளிட்ட சுய தேவைகளில் தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள முடியாதவர்களாக வலுவிழந்துள்ளவர்களாகவும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 833 பேர் தொடர்பாடல் குறைபாடுடையவர்களாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் 43 வீதமான ஆண்களும், 57 வீதமான பெண்களும் வலுவிழந்தவர்களாகக் காணப்படுவதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல் கூறுகின்றது.
தொழில் மற்றும் கல்வி;
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தமட்டில், பொருளாதார ரீதியாகச் செயல் வல்லமை உடைய 4 லட்சத்து 53 ஆயிரத்து 91 பேரில், 4 லட்சத்து 42 ஆணிரத்து 138 பேர் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளவர்ளாகவும், 10 ஆயிரத்து 953 பேர் வேலைவாய்ப்பற்றவர்களாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் வலுவிழந்தவர்களாக அல்லது மாற்றுத்திறனாளிகளாகக் கணக்கிடப்பட்டுள்ள 16 லட்சத்து 17 ஆயிரத்து 924 பேரில் (1.6 மில்லியன்), 34.6 வீதமான 5 லட்சத்து 58 ஆயிரத்து 75 பேர் ஆரம்பக் கல்வி உடையவர்களாகவும், 33.8 வீதமான 5 லட்சத்து 47 ஆயிரத்து 294 பேர் இடைநிலைக் கல்வி உடையவர்களாகவும், 13.9 வீதமான 2 லட்சத்து 25 ஆயிரத்து 276 பேர் பாடசாலைகளுக்குச் செல்லாதவர்களாகவும், இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேவேளை. 11.3 வீதமான ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 16 பேர் கல்விப் பொதுத்தராதர வகுப்பு வரையில் கல்வி கற்றவர்களாகவும், 5.1 வீதமான 83 ஆயிரத்து 650 பேர் கல்விப் பொதுத்தராதார உயர்தரம் வரையில் கல்வி கற்றவர்களாகவும், 1.3 வீதமான 21 ஆயிரத்து 613 பேர் பல்கலைக்கழகப் பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்விகற்றவர்களாகவும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் 45 ஆயிரம் பேர் வலுவிழந்தவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டிருக்கின்றது. இருப்பினும் புள்ளிவிபரத் திணைக்களம் யுத்தப் பாதிப்புக்கு உள்ளாகிய வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள வலுவிழந்தவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளிவிபரங்களைத் திரட்டியுள்ளதா என்பது தெரியவில்லை.
நிதியும் திட்டமிடலும்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்தவர்கள் தொடர்பில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் விசேட திட்டங்கள் எதுவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.
எந்தவொரு வேலைத்திட்டமானாலும், அதற்கு நிதிவசதியும் சீரான திட்டமிடலும் அவசியம். நிதி வசதியின்றி எந்தவொரு புனரமைப்பு வேலைகளையோ அல்லது அபிவிருத்தி பணிகளையோ முன்னெடுக்க முடியாது. நிதி வசதியிருந்தாலும், சீரான திட்டமிடப்படாத வேலைத் திட்டங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது. அவற்றின் மூலம் நிலையான அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியாது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்;டவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்பதும், வேலைத்திட்டங்கள் பரந்துபட்ட அளவில் சீராகத் திட்டமிடப்படவில்லை என்பதும் முக்கிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்ததையடுத்து, மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்போது, புனர்வாழ்வுப் பணிகளுக்கும், மீள்கட்டமைப்பு பணிகளுக்கும், இவை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கும் அரசாங்கம் பெருமளவில் நிதியொதுக்கிச் செயற்பட்டு வந்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களும், அதேபோன்று புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் தனிப்பட்;ட ரீதியிலும், குழுக்கள் மற்றும் அமைப்புக்களாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான நிதியுதவிகளையும், துறைசார்ந்த வகையிலான வேறு உதவிகளையும் வழங்கியிருக்கின்றனர். வழங்கி வருகின்றனர். இதனை மறுப்பதற்கில்லை.
ஆனால், நேர் சீரான திட்டமிடலின் கீழ் உருவாக்கப்பட்ட வேலைத் திட்டங்களின் கீழ் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால், வழங்கப்படுகின்ற உதவிகளும், முன்னெடுக்கப்படுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வேலைத்;திட்டங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீடித்து நிலைத்து நிற்கத்தக்க பயன்களை அளிக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.
மாற்றாற்றல் கொண்ட பெண்களின் அணிதிரள்வு
இந்த நிலையில், மாற்றாற்றல் உடையவர்கள் அல்லது வலுவிழந்தவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் இன்னும் சீரான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது பரந்த அளவில் இப்போது உணரப்பட்டிருக்கின்றது. மாற்றாற்றல் உள்ளவர்களில் குறிப்பாக பெண் மாற்றாற்றல் உள்ளவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தேசிய மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற குரல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தைச் சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட பெண்கள் மத்தியில் இருந்து எழுந்திருக்கின்றது.
சமூகம் பொதுவாகவே பெண்களை இரண்டாம் தர நிலையிலேயே வைத்துச் செயற்பட்டு வருகின்றது. பெண்கள் கல்வியிலும் துறைசார்ந்த நிலையில் தொழில்துறைகளிலும் முன்னேற்றமடைந்திருந்தாலும், குடும்ப, சமூக, பொருளாதார அரசியல் நிலைமைகளில் அவர்களுக்கு உரிய இடமளிக்கப்படவில்லை. இதுவே இன்றைய யதார்த்தமாகும்.
ஆணும் பெண்ணும் சம உரிமை பெற்றவர்கள் என்று தத்துவ ரீதியாக பால்நிலை சமத்துவம் பேசப்பட்டாலும், ஆn: ணாதிக்க நிலைமையே குடும்பங்களிலும், சமூகத்திலும் இன்னும் மேலோங்கியிருக்கின்றது. பெண்கள் தொடர்பிலான முடிவுகளை அல்லது தீர்மானங்களை மேற்கொள்கின்ற உரிமை ஆண்களின் கைகளிலேயே இன்னும் இருக்கின்றது. குடும்பத்தில் மட்டுமல்லாமல், தேசிய ரீதியிலான அரசியல் பொருளாதாரம் கல்வி உள்ளிட்ட சகல விடயங்களிலும் இதனைத் தெளிவாகக் காண முடிகின்றது.
இந்த நிலையில் நீண்டகால யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றாற்றல் கொண்ட பெண்களின் நிலைமை குறித்து விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், வலுவிழந்த பெண்களாக, எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாகக் கொண்டுள்ள பெண்களின் வாழ்க்கையை வளம்படுத்தவதற்காக, அவர்கள் மத்தியில் உள்ள மாற்றாற்றல் கொண்ட பெண்கள் துணிந்து அணி திரண்டிருக்கின்றார்கள்.
பிறரை நம்பிப் பயனில்லை. நாங்களே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இன்றைய அரசியல் மற்றும் சமூக சூழலில், இந்தப் பெண்களின் அணிதிரள்வும் எழுச்சியும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு
இவ்வாறு அணிதிரண்ட மாற்றாற்றல் கொண்ட பெண்களுக்கு நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. இந்த அமர்வுகளில் மாற்றாற்றல் கொண்ட பெண்களின் சமூக நிலைமைகள், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள சவால்கள், பிரச்சினைகள் போன்றவற்றை எடுத்துரைத்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளையும் முன் மொழிந்திருந்தார்கள்.
அதேவேளை, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடைய வாழ்வாதாரத்துக்கான உதவிகள் குறித்த விசேட வேலைத்திட்டம் தொடர்பிலும் அவர்கள் கருத்தக்களை முன்வைத்து வலியுறுத்தியிருந்தனர்.
மாற்றாற்றல் கொண்ட பெண்களின் இத்தகைய கருத்துக்களும், அவர்களுடைய கோரிக்கைகளும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியினரின் கவனத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதனையடுத்து, மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் விடயங்கள் அவர்களுடைய அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
இதற்கும் அப்பால், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் வேலைத்திட்டங்களில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிப் பெண்களின் செயற்பாடுகள் அவர்களுடைய முக்கிய கோரிக்கைகளை அரசாங்கத்தின் நேரடி கவனத்தி;ற்குக் கொண்டு செல்வதற்குப் பெரிதும் உதவியிருக்கின்றன.
இந்த வகையில் மாற்றாற்றல் கொண்ட பெண்களுக்கான ஓர் இல்லத்தை நிறுவுவதற்குஇணக்கம் தெரிவித்துள்ள அரசாங்கம் 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அது மட்டுமல்லாமல், அரசாங்கத்தினால் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான 12 ஆயிரத்து 600 பேருக்கு வேலை வாய்ப்புக்கான முதற் தடவையாக வரவுசெலவுத் திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்துள்ளது. இது மாற்றாற்றல் கொண்ட பெண்களுடைய முயற்சிக்குக் கிடைத்த மிக முக்கியமான முன்னேற்றமாகும். எனவே, இந்த வருடத்தில் மாற்றுத்திறனாளிகளுடைய செயற்பாடுகளில் இதனை அவர்களுடைய முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றுகூட குறிப்பிடலாம்.
சமூக ரீதியான கூட்டுப் பாதுகாப்பு
யுத்தம் ஏற்படுத்தியுள்ள இழப்புக்களில் குடும்ப உறவுகளையும், அன்புக்கும், ஆதரவுக்கும் உரியவர்களையும், உற்றவர்களையும் இழந்த இழப்பு என்பது மிக மிக மோசமானது. அதிலும், உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்தவர்கள், பார்வை இழந்தவர்கள், செவிப்புலனை இழந்தவர்கள், கடும் காயங்கள் காரணமாக வெளித் தெரியாத வகையில் உடல் ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள், உளவியல் ரீதியான பாதிப்புகள் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அளப்பரியது. ஈடு செய்ய முடியாதது. இவர்கள் முறையான பராமரிப்புத் துணையற்றவர்களாக அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களில் குடும்ப உறவுகளினதும், ஏனைய உற்றவர்களினதும், ஆதரவையம், அன்புப் பராமரிப்பையும் பெற்றிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இல்லையென்று கூறுவதற்கில்லை. ஆனாலும், அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை உத்தரவாதமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.
குழந்தைப் பருவம் கடந்து இளமைப் பருவம் எய்துகின்ற ஒவ்வொருவரும் திருமணப் பந்தத்தில் இணைந்து தமக்குரிய வாழ்க்கைத் துணைகளைத் தேடிக்கொண்டு குடும்பமாக வாழ்கின்றார்கள். அத்தகைய குடும்பப் பிணைப்பானது, இயலாமை நிலைமையை எய்தும் போது அவசியமான துணையுடன் கூடிய பராமரிப்பையும் ஆறுதலையும் தருவதற்குரிய கவசத்தையும் உருவாக்கி உதவுகின்றது.
ஆனால் மாற்றாற்றல் கொண்ட பெண்கள் இத்தகைய பாதுகாப்பு கவசத்திற்கு அடிப்படையான திருமணப் பந்தத்தில் இணைய முடியாதவர்களாக இருக்கின்றார்கள். அதற்கான வாய்ப்பு அற்றவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றார்கள். இருப்பினும் விதிவிலக்காக சிலர் தகுந்த துணைகளைப் பெற்று இல்லற வாழ்க்கையில் சிறப்புற்றிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆயினும், பெரும்பான்மையானவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
விடுதலைப்பலிகள் காலத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்களும், உணர்வற்ற நிலையில் (Pயசயடலணநன) அங்கங்கள் பாதிக்கப்பட்டு வலுவிழந்தவர்களுமான பெண்களுக்கென ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்களை நிறுவி அவர்களை, அவர்கள் பராமரித்து வந்தார்கள். அத்தகைய இல்லங்களில் வாழ்ந்த வலுவிழந்த பெண்கள் பலரும் அந்த இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த பல்வேறு வசதிகள், கல்வி சார்ந்த பயிற்சிகள் என்பவற்றின் மூலம், மாற்றாற்றல் மிக்கவர்களாக அன்றைய சூழலில் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.
காலத்தின் தேவை கருதி, சமூக ரீதியிலானதொரு கூட்டுப் பாதுகாப்பை இவர்களுக்காக உருவாக்கும் வகையில், அத்தகைய இல்லங்களின் மீள் செயற்பாடு அவசியம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வலுவிழந்த பெண்களுக்கும், மாற்றாற்றல் கொண்ட பெண்களுக்கும் மாற்றாற்றல் கொண்ட பெண்களுக்கான இல்லம் ஒன்றை உருவாக்குவதற்கென வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள், மாற்றாற்றல் கொண்ட பெண்களின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுமலர்ச்சிக்கான நம்பிக்கை
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கம் தானாக பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்திய போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுடைய அவசர அவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க திட்டங்களுக்கான முன்மொழிவுகளை உரிய முறையில் அரசாங்கத்திடம் முன்வைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்குத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகளை நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள நல்லாட்சி அரசாங்கதிடம்கூட பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்களை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் புனர்வாழ்வுப் பயிற்சிகளை வழங்கியிருந்த போதிலும், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அந்தப் பயிற்சிகள் ஆக்கபூர்வமான வழிகளில் உதவவில்லை. இதனால், அவர்கள் தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தங்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்த போதிலும், அவர்கள் தமது சொந்தக்காலில் நின்று உறுதியோடு வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாதவர்களாகவே இருக்கின்றரர்கள்.
அவர்களது வாழ்வாதாரத்துக்கென 4 லட்சம் ரூபா வரையில் வங்கிகளின் மூலமாக முன்னைய அரசாங்கம் கடனுதவி வழங்கிய போதிலும், நடைமுறைச் சிக்கல்கள் மிகுந்த பல்வேறு காரணங்களினால், அதன் மூலம் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை நிலைத்து நிற்கத்தக்கதாக அமைத்துக் கொள்ள முடியவில்லை.
இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகின்ற பண்ணைகளில் முன்னாள் போராளிகளில் ஒரு தொகையினருக்கு முன்னைய அரசாங்கத்தினால் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்தத் தொழிலாளர் வாழ்க்கையை வாழ்வாதாரமாகக் கொண்டு, தங்களுடைய பல்வேறு தேவைகளையும் அவர்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. பண்ணைத் தொழிலாளர் வாழ்க்கையானது, நவீன அடிமை வாழ்க்கைக்கு ஒப்பானதாக, அவர்களின் சுயமான சுதந்திரமான செயற்பாடுகளுக்கு ஒரு தiடையாகவும், தொடர்ச்சியாக இராணுவத்தினரால் கண்காணிக்கப்படுவதாகவுமே அமைந்துள்ளது. இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் முறையான திட்டங்கள் செயற்படுத்தப்படுவதன் ஊடாக அவர்களுடைய வாழ்க்கையில் மறமலர்ச்சி ஏற்படும் என்று நம்பப்படுகின்றது.