நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் மக்களின் வாழ்க்கைச்செலவை குறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கம்பஹா நகரில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் இன்று பிரதான பிரச்சினையாக இருப்பது வாழ்க்கைச்செலவு அதிகரிப்பாகும். வாழ்க்கைச்செலவு விரைவில் அதிகரிப்பதற்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமும் ஒரு காரணமாகும். தேவையான காலத்துக்கு மழை கிடைக்கப்பெறாதமையினால் சிலர் தங்களின் பயிர்செய்கைகளை கைவிட்டுச்சென்றதுடன் பயிர் செய்கையின் காலமும் மாற்றப்பட்டது. கால ஓட்டத்துக்கேற்ப பயிர்ச்செய்கைகள் முறையாக இடம்பெறாததால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
அத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக இந்த பிரச்சினைக்கு இலங்கை முகம்கொடுத்து வருகின்றது. இந்த நிலை நீண்டகாலத்துக்கு நாட்டை பாதிக்குமா? இல்லையா? என்று தற்போதே எதிர்வு கூறமுடியாது. அதனால் அரசாங்கம் இதற்கு தீர்வாக எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலம்வரைக்கும் பல அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலைக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் அரிசி, தேங்காய், மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
அரசாங்கம் என்றவகையில் இதற்கு தீர்வை தேடவேண்டும். நவம்பர், டிசம்பர் ஆகும்போது நெல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேசங்களுக்கு மழை கிடைத்து. அரிசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என நாங்கள் நினைத்தோம். என்றாலும் அது இடம்பெறவில்லை. அதனால் நாங்கள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. அதனாலேயே அரிசி விலை அதிகரித்தது.
இந்நிலையிலே நானும் ஜனாதிபதியும் வாழ்வாதார செலவை கட்டுப்படுத்தும் குழுவை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடினோம். அதன் பிரகாரம் அரச பிரிவினருடன் தனியார் துறையினரையும் இணைத்துக்கொண்டு நாடுபூராகவும் அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலையில் விநியோகிக்க தீர்மானித்தோம். இதில் அரிசி, பருப்பு,கிழங்கு, சீனி, வெங்காயம், டின் மீன் உட்பட பல பொருட்கள் அடங்குகின்றன.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலம் வரைக்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புத்தாண்டு காலமாகும்போது காலநிலை சீராகும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த காலம்வரைக்கும் மக்கள் பட்டிணியில் இருப்பதற்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம்.
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் ஊடாக முறையற்ற லாபத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை. சர்வதேசத்தில் விலை குறையும்போது நாட்டில் விலை குறைப்பதற்கும் சர்வதேசத்தில் விலை அதிகரிக்கும்போது அதற்கு நிகராக நாட்டில் விலை அதிகரிப்பதற்கும் நாங்கள் தயார். அதேபோன்று மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கும் எமது அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. அதன் பிரகாரம் நாட்டின் வாழ்க்கைச்செலவை கட்டுப்படுத்த பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் மக்களுக்கு நிவாரண பொதியொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே அடுத்தவருடம் ஆரம்பம் முதல் நாங்கள் தயாரித்துள்ள நிவாரணப்பொதிகளை நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.