உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அக்கட்சி அடுத்தவாரம் உயர்நீதிமன்றம் செல்வதற்கு தீர்மானித்துள்ளது.
அகலவத்தை, பதுளை, பாணந்துறை, மஹியங்கனை, மஹரகம, வெலிகம ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் சிறு சிறு தவறுகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாம் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்களில் கட்சியின் பெயருக்குப் பதிலாக கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிமின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சிறு தவறுகளே இடம்பெற்றுள்ளன. அதனை அடிப்படையாககொண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் வேட்புமனுத்தாக்கலின் போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தெடர்பில் நாம் ஒரு போதும் திருப்தியடையப்போவதில்லை. எனவே இது தொடர்பில் நீதிமன்றை நாடி பெற வேண்டிய தீர்ப்பைப் பெறவுள்ளோம். அதன் பின்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி தேர்தலில் வெற்றியடைந்து காட்டுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.