ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதியினர் விடுதலையை எதிர்த்து ஹேமராஜின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
நொய்டாவில் பல் மருத்துவர்களாக ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் பணிபுரிந்து வந்தனர். இவர்களுடைய ஒரே மகள் ஆருஷி (வயது 14). இவர் டெல்லியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அவரது வீட்டில் ஹேமராஜ் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு மே 15-ஆம்தேதி நள்ளிரவில் ஆருஷியும், ஹேமராஜும் கொலை செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கில், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. காசியாபாத்தில் உள்ள தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆருஷியின் பெற்றோர் இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆருஷியின் பெற்றோரைக் குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது. எனவே, தல்வார் தம்பதியரை விடுவிக்கிறோம் என்று தெரிவித்தது. இதையடுத்து தல்வார் தம்பதிகள் கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தல்வார் தம்பதியினரின் விடுதலையை எதிர்த்து ஹேமராஜின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ‘‘உயர்நீதிமன்றம் தல்வார் தம்பதியினரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அவர்கள் கொலையாளிகள். அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும். என் கணவர் கொலை வழக்கில் நீதி வேண்டும். அதற்காக தான் உச்சநீதிமன்றத்தை நாடி வந்துள்ளேன்’’ என ஹேமராஜின் மனைவி கும்காளா பஞ்சடே தெரிவித்துள்ளார்.