மெட்ரோ ரெயிலுக்காக இடிக்கப்பட்ட நேரு பூங்கா புதுப்பிக்கப்படுகிறது

334 0

மெட்ரோ ரெயிலுக்காக இடிக்கப்பட்ட நேரு பூங்கா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வருகிற மார்ச் மாதம் பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. திருமங்கலம்- நேரு பூங்கா வரையிலான சுரங்க ரெயில் பணிக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்கா, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 2011-ல் மூடப்பட்டது.

அங்கு பூமிக்கடியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக 7250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நேரு பூங்கா இடிக்கப்பட்டது. அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டன. 250 சதுர மீட்டர் பரப்பளவு நிலம் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தற்போது நேரு பூங்கா மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்து விட்டன. பணிகள் முடிந்ததும் நேரு பூங்காவை புதுப்பித்து தருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் மேதின பூங்காவை புதுப்பிக்கும் பணியில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக நேரு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது. புல் தரைகள், நீரூற்றுகள், பொது மக்கள் நடைபயிற்சி செய்வதற்கான நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல் வசதி அமைக்கப்படுகிறது. தியானம், யோகா செய்வதற்கு தனி இடம் கட்டப்படுகிறது. பூங்காவில் பொதுமக்கள் அமருவதற்காக கற்களால் செய்யப்பட்ட இருக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பூங்கா புதுப்பிப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற மார்ச் மாதம் புதுப்பொலிவுடன் பூங்கா திறக்கப்படுகிறது.

இதுபற்றி மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்கா, செனாய்நகர், திரு.வி.க. பூங்கா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டன.

தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையொட்டி நேரு பூங்கா திரு.வி.க. பூங்கா புதுப்பிப்பு பணிகள் நடைபெறுகின்றன. நேரு பூங்காவில் பொதுமக்களுக்காக நவீன வசதிகளுடன் புல்தரைகள், மரக்கன்றுகள், நடைபாதைகள், இருக்கைகள், யோகா, தியான நிலையம், விளையாட்டு கருவிகள், ஊஞ்சல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

புதுப்பிக்கப்பட்ட நேரு பூங்கா மார்ச் மாதம் திறக்கப்படுகிறது. செனாய்நகர் திரு.வி.க.பூங்காவில் வணிக வளாக வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment